#திருச்சிஆதிகுடிபட்டணபக்கோடா
திருச்சியின் சைவ பிரியர்களே இதோ உங்களுக்காக !!!
மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளுக்கு முன் உங்கள் எள்ளுத் தாத்தா திருச்சிக்கு சென்று சாப்பிட்ட ‘பட்டணம் பக்கோடா’வை அதே ருசியில், அதே நாற்காலி, அதே சூழலில், அதே போன்ற மாஸ்டரின் கைப்பக்குவத்தில் சாப்பிட வேண்டுமா..? உடனே ஆதிகுடி காபி கிளப்புக்கு கிளம்புங்கள்! 1916-ன் இறுதியில் தொடங்கப்பட்ட ‘ஆதிகுடி காபி கிளப்’புக்கு இப்போது வயது 100. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது மாலை நேரத்தில் பொழுதைக் கழிக்க கிளப் ஆரம்பித்தனர். சரக்கடித்தனர். இதற்கு சமமாக நம் ஆட்களும் கிளப்புகளைத் தொடங்கினர். ஆனால், சரக்கடிக்க அல்ல. காபி குடிக்க!
இதற்காகவே டம்ளர், டபரா எல்லாம் பக்காவாக ரெடி செய்தனர். சுடச்சுட காபியைக் குடித்தபடியே அரட்டை அடித்து நம் மக்களும் பொழுதைக் கழித்தனர். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஆதிகுடி காபி கிளப்பும். என்றாலும் காபியுடன் கூடவே சுவையான பட்டணம் பக்கோடாவும், ரவா பொங்கலும் கொடுக்கத் தொடங்கியதுதான் இந்த கிளப்பின் தனி அடையாளம். லால்குடியை அடுத்துள்ள சிறிய கிராமம்தான் ஆதிகுடி. இக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம அய்யர், ஊரின் மீதுள்ள அன்பில் திருச்சி மெயின் கார்டில் ஒரு கடையைத் தொடங்கினார்.
காலப்போக்கில் இவரால் தொடர்ந்து கிளப்பை நடத்த முடியாமல் போனது. ராயர், மணி அய்யங்கார் என கைமாறி கடைசியில் அதே கிளப்பில் வேலை செய்த ராமகிருஷ்ண அய்யரின் கைக்கு இந்த கிளப் வந்து சேர்ந்தது. போதாதா? அப்பாவின் கைப் பக்குவத்தை உடனிருந்து அறிந்த மகன் கண்ணனும், கணேசனும் இப்போது இந்த கிளப்பை நடத்துகிறார்கள். அதனால்தான் சுவையும் மணமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இன்று பாதாம் அல்வா, கோதுமை அல்வா, காசி அல்வா, தம்ரூட் அல்வா... என நாளுக்கொரு அல்வாவை ஸ்பெஷலாக விற்கிறார்கள்; பரிமாறுகிறார்கள்.
வாடிக்கையாளர்களும் காபிக்கு சமமாக இதையும் தினமும் ருசிக்கிறார்கள். என்றாலும் ‘பட்டணம் பக்கோடா’வும், ‘ஸ்பெஷல் அடை’யும் ஒட்டுமொத்த திருச்சியையும் கட்டிப் போட்டிருக்கிறது.‘‘அப்பலாம் சென்னையும் திருச்சியும்தான் பட்டணம். நாடக கொட்டாயும் இங்க எக்கச்சக்கம். ‘பட்டணம் போயிட்டு வரேன்’னு தென் மாவட்டங்கள்லயாராவது சொன்னா அது சென்னை இல்லைனா திருச்சியைத்தான் குறிப்பிடும்...’’ மலர்ச்சியுடன் தொடங்குகிறார் மூத்தவரான கண்ணன்.‘‘அந்தக் காலத்துல கடலை மாவுல உதிரி உதிரியா செய்யற பக்கோடாதான் தமிழகம் முழுக்க கிடைச்சது. இந்தச் சூழல்லதான் எங்கப்பா முதன் முதல்ல போண்டா சைசுக்கு மென்மையான பக்கோடாவைப் போட்டார்!
மதராஸோ சென்னையோ... அதெல்லாம் வெறும் 300 - 400 வருஷங்களுக்கு முன்னாடிதான் உருவாச்சு. திருச்சி அப்படியா? சங்க காலத்துலேந்தே உறையூர் பட்டணமாச்சே... கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷ நகரமாச்சே... அதனாலதான் உறையூர் ஓரமா ஆரம்பிக்கப்பட்ட இந்த கிளப்புல செய்யற பக்கோடாவுக்கு அப்பா, ‘பட்டணம் பக்கோடா’னு பெயர் வைச்சார்...’’ சொல்லும்போதே கணேசனின் குரலில் அவ்வளவு பெருமை. அதிகாலை ரவா பொங்கலும் அந்திசாயும் நேரத்தில் பட்டணம் பக்கோடாவும் அடை - அவியலும் சுடச் சுட இங்கு கிடைக்கிறது. இதற்காகவே ஸ்பெஷலாக தேங்காய், கொத்தமல்லி சட்னியோடு, போதுமென்கிற அளவுக்கு சாம்பாரும் ஊற்றுகிறார்கள்.
‘‘எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. சும்மாவா... வெங்கட்ராம அய்யரோட தனி கண்டுபிடிப்பாச்சே! நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர், ஜெமினி கணேசன்னு திருச்சிக்கு நாடகம் போட வர்ற எல்லாருமே தவறாம இந்த கிளப்புக்கு வருவாங்க. அதே மாதிரி இந்தப் பக்கம் பிரசாரம், பொதுக் கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் ஆள் அனுப்பியாவது பக்கோடாவை வாங்கிட்டுப் போவார் கலைஞர் அய்யா! இந்த கிளப் ஆரம்பிக்கப்பட்டப்ப எந்த கட்டடம் இருந்ததோ அதே பில்டிங்குலதான் இப்பவும் இயங்குகிறது.
தினமும் காலை 5 மணிக்கு தொடங்கி, மதியம் 12.30 மணி வரையிலும், திரும்பவும் மாலை 3 முதல் 5 மணி வரையிலும் பக்கோடா, காபி காம்பினேஷனுக்காகவே கூட்டம் அலைமோதுகிறது. ரவா பொங்கல் இன்னொரு ஸ்பெஷல். ரவையை நன்கு வறுத்து சிறிதளவு பாசிப்பருப்பு சேர்த்து குழையும்படி வேகவைத்து, மிளகைத் தூவி, இஞ்சி, சீரகம், கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்து பதமாகக் கொடுக்கிறார்கள். இதன் நடுவே வடையை வைத்து சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால்... அப்படியே சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு. சரி. அப்படியென்றால் மதியம் ஒரு மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை கிளப் இயங்காதா?யார் சொன்னது? அந்த நேரத்திலும் மக்கள் கும்பல் கும்பலாக வருகிறார்கள். காரணம், சூடாகக் கிடைக்கும் வெண்ணெய் அடை. தொட்டுக்கொள்ள காய்கறி அவியல்!
No comments:
Post a Comment